sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஊர் உலாவு பலி கொண்டு,
தக்கராகம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=3yI2qwKTMms
1.071   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிறை கொள் சடையர்; புலியின்
தக்கேசி   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=hAH9gL5X5EQ
2.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;
பியந்தைக்காந்தாரம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=RK-BhZK3vkU
7.093   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நீரும் மலரும் நிலவும் சடைமேல்
குறிஞ்சி   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=IxgdpEeZDvI

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.029   ஊர் உலாவு பலி கொண்டு,  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு சித்தநாதேசர் திருவடிகள் போற்றி )
ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த,
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்,
சீர் உலாவும் மறையோர் நறையூரில்,
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!

[1]
காடும் நாடும் கலக்கப் பலி நண்ணி,
ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ,
வீடும் ஆக மறையோர் நறையூரில்,
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!

[2]
கல்வியாளர், கனகம் அழல் மேனி
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர்,
மல்கு திங்கள் பொழில் சூழ், நறையூரில்
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!

[3]
நீட வல்ல நிமிர் புன்சடை தாழ
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்,
பாடல் வண்டு பயிலும், நறையூரில்
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

[4]
உம்பராலும் உலகின் அவராலும்
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்,
நண்பு உலாவும் மறையோர், நறையூரில்
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

[5]
கூர் உலாவு படையான், விடை ஏறி,
போர் உலாவு மழுவான், அனல் ஆடி,
பேர் உலாவு பெருமான், நறையூரில்
சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே.

[6]
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த
வென்றி வில்லி விமலன்-விரும்பும் ஊர்,
மன்றில் வாச மணம் ஆர், நறையூரில்
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

[7]
அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்,
பரக்கும் கீர்த்தி உடையார், நறையூரில்
திருக்கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

[8]
ஆழியானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்து, மேல்
சூழும் நேட, எரி ஆம் ஒருவன் சீர்
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!

[9]
மெய்யின் மாசர், விரி நுண் துகில் இலார்,
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்!
உய்ய வேண்டில், இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே.

[10]
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்
பத்தும் பாட, பறையும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.071   பிறை கொள் சடையர்; புலியின்  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு சித்தநாதேசர் திருவடிகள் போற்றி )
பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்;
கறை கொள் கண்டர்; கபாலம் ஏந்தும் கையர்; கங்காளர்
மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வு எய்தி,
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[1]
பொங்கு ஆர் சடையர்; புனலர்; அனலர் பூதம் பாடவே,
தம் காதலியும் தாமும் உடன் ஆய்த் தனி ஓர் விடை ஏறி,
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி, குளிர்பொய்கைச்
செங்கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே.

[2]
முடி கொள் சடையர்; முளை வெண்மதியர்; மூவா மேனிமேல்
பொடி கொள் நூலர்; புலியின் அதளர் புரிபுன் சடை தாழ,
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாயக்
கொடி கொள் மாடக்குழாம் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[3]
பின் தாழ் சடைமேல் நகுவெண்தலையர்; பிரமன் தலை ஏந்தி,
மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர்
பொன் தாழ் கொன்றை, செருந்தி, புன்னை, பொருந்து, செண்பகம்,
சென்று ஆர் செல்வத் திரு ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[4]
நீர் ஆர் முடியர்; கறை கொள் கண்டர்; மறைகள் நிறை நாவர்
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே,
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல,
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[5]
நீண்ட சடையர்; நிரை கொள் கொன்றை விரை கொள் மலர்மாலை
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனிப் பவளத்து எழிலார் வந்து
ஈண்டு மாடம், எழில் ஆர் சோலை, இலங்கு கோபுரம்,
தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[6]
குழல் ஆர் சடையர்; கொக்கின் இறகர்; கோல நிற மத்தம்
தழல் ஆர் மேனித் தவள நீற்றர்; சரி கோவணக்கீளர்
எழில் ஆர் நாகம் புலியின் உடைமேல் இசைத்து, விடை ஏறி,
கழல் ஆர் சிலம்பு புலம்ப, வருவார் சித்தீச்சுரத்தாரே.

[7]
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலைமலை தன்னை
வரை ஆர் தோளால் எடுக்க, முடிகள் நெரிந்து மனம் ஒன்றி
உரை ஆர் கீதம் பாட, நல்ல உலப்பு இல் அருள் செய்தார்
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[8]
நெடியான் பிரமன் நேடிக் காணார் நினைப்பார் மனத்தாராய்,
அடியார் அவரும் அருமா மறையும் அண்டத்து அரரும்
முடியால் வணங்கிக் குணங்கள் ஏத்தி, முதல்வா, அருள்! என்ன,
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[9]
நின்று உண் சமணர், இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார்,
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள்!
கன்று உண் பயப்பால் உண்ண முலையில், கபாலம் அயல் வழிய,
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[10]
குயில் ஆர் கோல மாதவிகள், குளிர் பூஞ்சுர புன்னை,
செயில் ஆர் பொய்கை, சேரும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரை,
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன்,
பயில்வார்க்கு இனிய, பாடல் வல்லார் பாவம் நாசமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.087   நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு சித்தநாதேசர் திருவடிகள் போற்றி )
நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; மேனி அரியான்;
முன் ஆய ஒளியான்;
நீர் இயல், காலும் ஆகி, நிறை வானும் ஆகி, உறு தீயும்
ஆய நிமலன்
ஊர் இயல் பிச்சைப் பேணி, உலகங்கள் ஏத்த, நல்க
உண்டு, பண்டு, சுடலை,
நாரி ஓர் பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில்
நம்பன் அவனே.

[1]
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை தன் கை எதிர்
நாணி பூண, வரையில்
கடும் அயில் அம்பு கோத்து, எயில் செற்று உகந்து,
அமரர்க்கு அளித்த தலைவன்;
மடமயில் ஊர்தி தாத என நின்று, தொண்டர் மனம் நின்ற
மைந்தன் மருவும்
நடம் மயில் ஆல, நீடு குயில் கூவு சோலை நறையூரில்
நம்பன் அவனே.

[2]
சூடக முன்கை மங்கை ஒரு பாகம் ஆக, அருள்
காரணங்கள் வருவான்;
ஈடு அகம் ஆன நோக்கி, இடு பிச்சை கொண்டு, படு
பிச்சன் என்று பரவ,
தோடு அகம் ஆய் ஓர் காதும், ஒரு காது இலங்கு குழை
தாழ, வேழ உரியன்
நாடகம் ஆக ஆடி, மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன்
அவனே.

[3]
சாயல் நல் மாது ஒர்பாகன்; விதி ஆய சோதி; கதி ஆக
நின்ற கடவுள
ஆய் அகம் என்னுள் வந்த, அருள் அருள் ஆய,
செல்வன்; இருள் ஆய கண்டன்; அவனித்
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்
கண் வந்து தொழுவார்
நாயகன் என்று இறைஞ்சி, மறையோர்கள் பேணும்
நறையூரில் நம்பன் அவனே.

[4]
நெதி படு மெய் எம் ஐயன்; நிறை சோலை சுற்றி நிகழ்
அமபலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன்; எமர் சுற்றம்
ஆய இறைவன்;
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து, விடை ஏறி
இல் பலி கொள்வான்
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில்
நம்பன் அவனே.

[5]
கணிகை ஒர் சென்னி மன்னும், மது வன்னி கொன்றை
மலர் துன்று செஞ்சடையினான்;
பணிகையின் முன் இலங்க, வரு வேடம் மன்னு பல ஆகி
நின்ற பரமன்;
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருள்
ஆன ஆதி அருளான்
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில்
நம்பன் அவனே.

[6]
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும், அங்கம் அவை ஆர,
ஆடல் அரவம்
மிளிர்தரு கை இலங்க, அனல் ஏந்தி ஆடும் விகிர்தன்;
விடம் கொள் மிடறன்
துளி தரு சோலை ஆலை தொழில் மேவ, வேதம் எழில்
ஆர, வென்றி அருளும்,
நளிர்மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும், நறையூரில்
நம்பன் அவனே.

[7]
அடல் எருது ஏறு உகந்த, அதிரும் கழல்கள் எதிரும்
சிலம்பொடு இசைய,
கடல் இடை நஞ்சம் உண்டு கனிவு உற்ற கண்டன் முனிவு
உற்று இலங்கை அரையன்
உடலொடு தோள் அனைத்தும் முடிபத்து இறுத்தும், இசை
கேட்டு இரங்கி, ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி, நமை ஆள வல்ல நறையூரில்
நம்பன் அவனே.

[8]
குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர் கூடி நேடி,
நினைவுற்
றில பல எய்த ஒணாமை எரி ஆய் உயர்ந்த பெரியான்;
இலங்கு சடையன்
சில பல தொண்டர் நின்று பெருமை(க்) கள் பேச, வரு
மைத் திகழ்ந்த பொழிலின்
நல மலர் சிந்த, வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன்
அவனே.

[9]
துவர் உறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்
தாமும், அல்ல சமணும்,
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான்;
பிறங்கு சடையன்
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண, முறை மாதர்
பாடி மருவும்
நவமணி துன்று கோயில், ஒளி பொன் செய் மாட
நறையூரில் நம்பன் அவனே.

[10]
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன்,
முந்தி உண
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில்
நம்பன் அவனை,
ஈனம் இலாத வண்ணம், இசையால் உரைத்த தமிழ் மாலை
பத்தும் நினைவார்
வானம் நிலாவ வல்லர்; நிலம் எங்கும் நின்று வழிபாடு
செய்யும், மிகவே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.093   நீரும் மலரும் நிலவும் சடைமேல்  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு சௌந்தரேசர் திருவடிகள் போற்றி )
நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் அரவம் உடையான் இடம் ஆம்-
வாரும் அருவி மணி, பொன், கொழித்துச்
சேரும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

[1]
அளைப் பைஅரவு ஏர் இடையாள் அஞ்ச,
துளைக்கைக்கரித் தோல் உரித்தான் இடம் ஆம்-
வளைக்கைம் மடவார் மடுவில்-தடநீர்த்
திளைக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

[2]
இகழும் தகையோர் எயில் மூன்றும் எரித்த
பகழியொடு வில் உடையான் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலம்-
திகழும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

[3]
மறக் கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக் கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம்-
நறக் கொள் கமலம் நளி பள்ளி எழத்
திறக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

[4]
முழுநீறு அணி மேனியன், மொய்குழலார்
எழு நீர்மை கொள்வான், அமரும் இடம் ஆம்-
கழுநீர் கமழக் கயல், சேல், உகளும்
செழுநீர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

[5]
ஊன் ஆர் உடை வெண்தலை உண் பலி கொண்டு,
ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம்-
வான் ஆர் மதியம் பதி வண்பொழில்வாய்த்
தேன் ஆர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

[6]
கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய்
நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம்-
வார் ஊர் முலையார் மருவும் மறுகில்
தேர் ஊர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

[7]
கரியின் உரியும், கலைமான்மறியும்,
எரியும் மழுவும், உடையான் இடம் ஆம்-
புரியும் மறையோர் நிறை சொல்பொருள்கள்
தெரியும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

[8]
பேணா முனிவன் பெரு வேள்வி எலாம்
மாணாமை செய்தான் மருவும், இடம் ஆம்-
பாண் ஆர் குழலும், முழவும், விழவில்,
சேண் ஆர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

[9]
குறியில் வழுவாக் கொடுங்கூற்று உதைத்த
எறியும் மழுவாள் படையான் இடம் ஆம்-
நெறியில் வழுவா நியமத்தவர்கள்
செறியும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

[10]
போர் ஆர் புரம் எய் புனிதன் அமரும்
சீர் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தை
ஆரூரன் சொல் இவை வல்லவர்கள்,
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே.

[11]
Back to Top

This page was last modified on Fri, 15 Dec 2023 21:06:13 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_list.php?column_name=thalam&string_value=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D)&lang=tamil;